உடல், மனம், ஆன்மா, உணர்ச்சிகள் என அனைத்தையும் ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் கலையாக 'யோகா' உள்ளது. இந்தியாவில் இதனைக் கற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் வந்து செல்கின்றனர்.
இன்றைய பிசி லைஃப் ஸ்டைலில் மன அமைதிக்கு யோகா மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 4 வயது சிறுவர்கள் முதல் 95 வயது பாட்டி வரை யோகாவில் விதவிதமாய் பல்வேறு சாதனைகளை படைத்தவர்களைப் பார்த்திருப்போம்.
அந்த சாதனைப் பட்டியலில் தற்போது புதிதாக சேர்ந்திருக்கு பெயர் 9 வயது சிறுவனான ரேயான்ஷ் சுரானி. துபாயில் வசித்து வரும் இந்திய தம்பதியின் மகன் ரேயான்ஷ் சுரானி. இவர்களது பெற்றோர் தினந்தோறும் வீட்டிலேயே யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதனை ரேயான்ஷ் சுரானி, குழந்தையான இருக்கும் போதில் இருந்தே பார்த்து வந்ததால், அதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. 4 வயதில் இருந்தே யோகா பயிற்சி பெற்றுவருகிறார்.
அப்போது தான் தனது பெற்றோர் மூலமாக இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஆனந்த் சேகர் யோகா பள்ளியில் 200 மணி நேர யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடைபெறுவதை ரேயான்ஷ் அறிந்து கொண்டார்.
யோகா பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ரேயான்ஷை அந்த பயிற்சி வகுப்பில் சேர உந்தித் தள்ளியது. பெற்றோர் சம்மதத்துடன் யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்த ரேயான்ஷ், தீவிரமாக பயிற்சி பெற்று யோகாவை பிறருக்கு கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை நன்கு கற்றறிந்த பயிற்சியாளராக மாறியுள்ளார்.
இதனையடுத்து, 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி ஆனந்த் சேகர் யோகா பள்ளியிலிருந்து 200 மணிநேர யோகா ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.
உலகிலேயே 9 வயதில் யோகா ஆசிரியர் பட்டம் பெற்ற முதல் சிறுவன் ரேயான்ஷ் சுரானி ஆவார். இதுகுறித்து தகவலறிந்த கின்னஸ் புத்தக நிர்வாகிகள், அவரை தொடர்புகொண்டு அவரது சான்றிதழ்களை உறுதி செய்தனர்.
இதையடுத்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியராக ரேயான்ஷ் சுரானியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ரேயான்ஷ் உடலை வளைத்து பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி அசத்தியுள்ளார்