விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (28) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலை பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில் அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் என்ற வகையில் ஆனந்த கல்லூரியில் உருவான முதலாவது விமானப் படைத் தளபதியாகவும் கருதப்படுவார்.
1988 ஆம் ஆண்டில் பயிலுநராக கொத்தலால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துக்கொண்டதோடு, அநுராதபுரம் முகாமில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் முதலாம் இலக்க 33ஆவது விமானப்படை பயிற்சி பாடநெறியில் பங்குபற்றி பாடநெறியின் மிகச்சிறந்த பயிலுநராகவும் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளில் விமானப்படை அதிகாரியாக பங்கேற்ற அவர் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். விமானப்படை தளபதியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக அவர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.