யுக்ரேன் போரில் திடீர் திருப்பம் - ரஷ்யாவில் என்ன நடக்கிறது?

TubeTamil News
0

யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியுள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட இந்த கூலிப்படையினர் ரஷ்யாவின் தென் பகுதியில் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்க தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்துள்ளார்.




யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்குத் உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. நேற்றிரவு அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

கருங்கடலோரம் அமைந்துள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன. வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தெற்கே இருக்கிறது.
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னை சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் மிரட்டல் விடுத்துள்ளார்.


ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்கள்
யுக்ரேன் போரில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக திகழ்ந்த, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வீரர்கள் காவல் காக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

அவர்கள் ராணுவ தலைமையகத்தை பாதுகாக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களா அல்லது வாக்னர் கூலிப்படையினரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. அந்த வீடியோக்களில் காட்டப்படும் கட்டடம் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் பதிவு செய்யப்பட்டவை என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது. அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அந்த நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே நீடிக்கிறது. ,ளைஞர்கள் தெருமுனைகளில் கூடி அங்கு நடந்தேறும் நிகழ்வுகளை நேரலை செய்கின்றனர். தெருக்களை சுத்தம் செய்வோர் அவர்களது வழக்கமான பணிகளை தொடர்கின்றனர். ஆனால், அதனூடாக அடுத்தடுத்து அரங்கேறும் நிகழ்வுகள் இயல்பானதாக இல்லை.
'25,000 பேர் சாகத் தயார்' - பிரிகோஸின்

வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தனது டெலிகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவில், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்புவதால் வாக்னர் குழுவில் உள்ள அனைவருமே சாகவும் தயாராக இருபபதாக குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் அனைவரும் சாகத் தயாராக இருக்கிறோம். நாங்கள் 25,000 மற்றும் கூடுதலாக 25,000" என்று அவர் அந்த ஆடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது ரஷ்ய மக்களுக்கான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ராணுவ நிலைகளை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு விட்டதாக கூறும் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு மற்றும் வலேரி கெரசிமோவை சந்திக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், தலைநகர் மாஸ்கோ நோக்கி சுமார் 1,600 கி.மீ. தூர அணிவகுப்புக்கு தனது படைகள் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்துளளார். பிரிகோஸின் பேச்சு அடங்கிய 2 வீடியோக்களும் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்குள் பதிவு செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது. அதனை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.
மேலும் ஒரு நகரைக் வசமாக்கியதா 'வாக்னர்'?

ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் இருந்து மாஸ்கோ நோக்கி புறப்பட்டுவிட்ட 'வாக்னர்' படைகள் மேலும் ஒரு நகரை கைப்பற்றிவிட்டதாக பிபிசி தகவல்கள் கூறுகின்றன. ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கும், தலைநகர் மாஸ்கோவுக்கும் நடுவே கிட்டத்தட்ட பாதி தொலைவில் உள்ள வெரோனேஸ் நகரில் ராணுவ முகாம்கள், தளவாடங்களை வாக்னர் கூலிப்படை கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

வெரோனேஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒன்று பற்றி எரிகிறது. அங்கே தீயை அணைக்கும் பணியில் 100 தீயணைக்கும் வீரர்கள் ஈடுபட்டிருப்பதாக அந்த பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் குசெவ் தெரிவித்துளளார்.

அந்த இடத்தில் இருந்து கரும்புகை வானோக்கி எழும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோக்களை தனிப்பட்ட முறையில் உறுதி செய்து கொள்ளும் பணியில் பிபிசி ஈடுபட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top