எவருக்கும் அநீதி இழைக்கப்படாமலும், தகுதியான எவரையும் கைவிடாமலும் "அஸ்வசும" சமூக பாதுகாப்பு நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கினார்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய செயற்படுமாறு அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
இந்தநிலையில், அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் பொது மக்களுக்கான கொடுப்பனவு திட்டங்களான முதியோர், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
'அஸ்வெசும' சமூக நலன்புரித் திட்டதில் பதிவு செய்துக்கொள்ள முடியாவிட்டாலும் இந்த திட்டத்தில், இணைந்து கொள்ள விரும்புவோருக்கு வருடாந்தம் வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அஸ்வெசும திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும்.
அத்துடன், தற்போது வெளியிடப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் பெயர் பட்டியலில், பெயர் இல்லாதவர்கள் அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
“அஸ்வசும” சமூக பாதுகாப்பு நலன் திட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பின்னர் 3.3 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.