மரண விசாரணைக்கு இலஞ்சம் – ஜனாதிபதி செயலகத்துக்கு பறந்தது கடிதம்..!!

tubetamil
0




வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் – பல்லசுட்டி பகுதியில் வசித்துவந்த பிரசாத் இராஜேஸ்வரி கடந்த 2023.05.09 அன்று அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணம் தற்கொலை அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கும் என அவரது சகோதரர் ஜனாதிபதி செயலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் உள்ளதாவது,

பண்ணாகம் – பல்லசுட்டி பகுதியில் வசிக்கும் சண்முகம் இராசேந்திரம் ஆகிய நான் அறியத் தருவது யாதெனின், எனது சகோதரியான பிரசாத் இராஜேஸ்வரி கடந்த 2023.05.09 அன்று தூக்கில் தொங்கி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக எனது மகன் ஸ்டாலின் 2023.05.10 அன்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மரணம் சம்பந்தமான முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டை செய்யும்போது பிரசாத் இராஜேஸ்வரி என்பவரது கணவரான பிரசாத் மீது சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதிலே, எனது சகோதரி 2020ஆம் ஆண்டு திருமணம் முடித்த காலப் பகுதியில் இருந்து அடித்தும், துன்புறுத்தியும், கீழ்த்தரமான வார்த்தையை பேசியும், பல தடவைகள் பிரிந்தும் வாழ்ந்திருக்கின்றார்கள். பின்னர் உறவினர்கள் இணைந்து அவரை சேர்த்தும் வைத்துள்ளோம். அத்துடன் எனது சகோதரி உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும் பிரசாத் என்பவரால் துன்புறுத்தப்பட்டு பிரிந்தும் இருந்தார். பின்னர் உறவினர்களாகிய நாங்கள் அவரை சேர்ந்து வைத்தோம்.

எனவே இக் காரணத்தினால் தான் பிரசாத் என்பவர் மீது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சந்தேகம் இருப்பதாக முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால் வட்டுக்கோட்டை பொலிஸார் எதிராளியான பிரசாத் என்பவரின் சார்பாக முறையற்ற விசாரணையை மேற்கொண்டுள்ளார்கள்.

இவர்களுடன் மரண விசாரணைக்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் அவர்களும் முறையற்ற மரண விசாரணையை மேற்கொண்டிருந்தார்.

இறந்த எனது சகோதரியின் கையில், மரணித்த போது தங்க மோதிரமும் காதில் தோடுகளும் இருந்தன. உடலை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை முடித்து உடலை எங்களிடம் ஒப்படைக்கும்போது கையில் இருந்த மோதிரம் களவாடப்பட்டிருந்தது. எனது தங்கையின் கையில் மோதிரம் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.

இவ் விடயம் சம்பந்தமாக சட்ட வைத்திய அதிகாரிக்கும், பொலிஸாருக்கும், திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும், எடுத்து கூறியபோது எங்களை கீழ்த்தரமாக பேசி, எனது சகோதரியின் உடலை எதிராளியிடம் ஒப்படைத்து தீயிட்டு எரிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்னிடம் ஐயாயிரம் ரூபா பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் எனது மருமகனிடம் இருந்து இரண்டாயிரம் ருபா பணத்தை பெற்றுக் கொண்டனர். இவ்வாறான காரணத்தினால் தான் இவர்கள் மீது சந்தேகம் தோன்றியுள்ளது.

இவ்வளவு காலமும் பொலிஸாரினால் சட்ட ரீதியான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். தங்கையின் இறப்பில் இருந்து எமது குடும்பத்தினரால் மீண்டு வர முடியாத காரணத்தினால் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தோம். எமது துன்பத்தையும், எமக்கு நடந்து அநீதியையும் கருத்தில் கொண்டு இதற்கான நீதியை பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனது தங்கையின் மரணம் தற்கொலை அல்லை, மர்மமான முறையில் பிரசாத் என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட கொலை என சந்தேகம் தோன்றுகிறது.

எனது தங்கையின் மரணத்தை பரிசோதனை செய்ய வந்த திடீர் மரண விசாரணை அதிகாரியான ஜெயபாலசிங்கம் என்பவர், எனது தங்கையின் உடலத்தை பல நிர்வாண கோலங்களில் 20 இற்கும் மேற்பட்ட படங்களையும் காணொளிகளையும் தனது கை தொலைபேசியில் பதிவு செய்துள்ளமையும் எனது தங்கையின் மரணத்தின் மீதான சந்தேகத்தினை மீண்டும் தூண்டுகிறது – என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து யாழ். பிரதிப் பொலிஸ் அதிபரின் நடவடிக்கையின் கீழ் நேற்றையதினம் (29) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸார், முறைப்பாட்டிற்கு அல்லது விசாரணைக்கு செல்லும் மக்களை அநாகரிகமாக நடாத்துவது, இலஞ்சம் வாங்குவது என்பன அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top