உலகளாவிய ரீதியிலான அடுத்த தொற்று நோய் அமெரிக்காவில் இருந்து ஆரம்பிக்கலாம் என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் நியூயோர்க் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த இரு பல்கலைக்கழகங்கள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இந்த தொற்று நோயானது, விலங்குகளிடம் காணப்படும் ஒரு வைரஸ் மனிதர்களுக்கு எளிதில் பரவுவதன் மூலம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, அமெரிக்காவில் விலங்குகளை வளர்பதற்காகவும் , இறைச்சிக்காகவும், அவற்றின் தோல்களை ஆடைகளாகவும், அலங்காரப் பொருட்களாகவும், காட்டு விலங்கு வர்த்தகங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறான தேவைகளுக்காக பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விலங்குகள் உரிய சுகாதார ரீதியிலான சோதனைகளுடன் இறக்குமதி செய்யப்படுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக உரிய பாதுகாப்பு முறைகளையும் சுகாதார வழிமுறைகளையும் கையாள தவறும் பட்சத்தில் விலங்குகளுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான கால்நடைகளை பயன்படுத்துபவர்கள், அவற்றைக் கையாள்பவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் வணிகப் பண்ணைகளை நடத்துபவர்கள் இந்த தொற்றின் மூலம் பாதிப்படையலாம் என குறித்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 220 மில்லியன் காட்டு விலங்குகள், செல்லப்பிராணிகளாக மற்றும் பிற நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படுகின்றன."நாம் இதற்கு முன்னர் இருந்ததை விட அதிகளவில் பாதிப்படையக்கூடியவர்கள் எனவும், தனி நபர் ஒருவர் ஒரு நாய் அல்லது பூனையை அமெரிக்காவினுள் கொண்டு வர விரும்பினால் அதற்கென சட்டரீதியான செயல்பாடுகள் உள்ளன. எனினும், பெரிய தொகையிலான விலங்குகளை இறக்குமதி செய்யும் போது அதற்கென சில கட்டுப்பாடுகளே உள்ளதாகவும்" ஆராய்ச்சியின் முதன்மை ஆய்வாளரான ஆன் லின்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
விலங்குகளை அதிகளவில் இறக்குமதி செய்யும் நிலையில் அது ஒழுங்கான சுகாதார ரீதியில் இடம்பெறவில்லை என குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், கொவிட் தொற்றினைப்போல அடுத்த உலகளாவிய ரீதியிலான தொற்று நோய் அமெரிக்காவில் பதிவாகக்கூடும் என குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.