யாழ்.அராலி வள்ளியம்மை பாடசாலை ஆசிரியர் நியமனத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ளதா..! பெற்றோர் கேள்வி...

tubetamil
0

 அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியாசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் இது குறித்து வடக்கு கல்வி அமைச்சு கவனத்திற்கொள்ளவில்லை என சம்பந்தப்பட்ட பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக . உமாமகேஸ்வரன் பதவியில் இருந்தவேளை, குறித்த பாடசாலையின் ஆசிரியர் வளம் பற்றாக்குறை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

அதற்கு அவர், கல்வியற் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறிய 350 பேருக்கு நியமனம் வழங்கும்போது குறித்த பாடசாலைக்கு தேவையான ஆசிரியர் வளத்தினை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் குறித்த பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்கவில்லை.


இது குறித்து சம்பந்தப்பட்ட பெற்றோர் மேலும் தெரிவிக்கையில்,

தரம் ஒன்று வகுப்பிற்கு ஆசிரியர் இல்லை. ஆகையால் தரம் இரண்டில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரே தரம் ஒன்றிற்கும் கல்வியை புகட்டுகிறார்.

இதனால் அந்த ஆசிரியருக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. அத்துடன் முன்பள்ளியில் கல்வி கற்றபின்னர் மாணவர்கள் நேரடியாக தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றமடைந்து செல்கின்றனர்.

நிரந்தர ஆசிரியர் ஒருவரின் கற்பித்தல்

அவர்களது கல்வி மற்றும் ஒழுக்கம் என்பன இங்கேயே ஆரம்பமாகிறது.இந்நிலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் ஒருவரின் கற்பித்தல் மற்றும் வழிகாட்டல் என்பன இன்றியமையாத ஒன்றாகும்.

கடந்த ஜனவரி மாதம் குறித்த வகுப்பிற்கான ஆசிரியர் இடமாற்றம் பெற்று சென்றதில் இருந்து இதுவரை ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படாத நிலையில் தரம் இரண்டு ஆசிரியரே இரண்டு வகுப்புகளையும் கண்காணித்து வருகின்றார்.

அத்துடன் சுகாதார பாடத்திற்கும் ஆசிரியர் ஒருவர் இல்லாத காரணத்தினால் வெற்றிடம் நிலவுகிறது. இதனால் மாணவர்கள் அந்த பாடத்தை கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கல்வி என்பது மாணவர்களது உரிமை

மேலும் இரண்டு ஆசிரியர்கள் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளனர். ஆசிரியர் நியமனத்தில் அராலி வள்ளியம்மை வித்தியாசாலை ஓரங்கட்டப்படுகிறதா? இவ்வாறு இருக்கையில் இந்த மாணவர்கள் எவ்வாறு கல்வி கற்பது? கல்வி என்பது மாணவர்களது உரிமை.

அது அவர்களுக்கு சரியாக வழங்கப்பட வேண்டும். வேறு பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர் வளங்களை எடுத்து இந்த பாடசாலைக்கு வழங்க வேண்டும்.

எனவே வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு விரைவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அவ்வாறு ஆசிரியர்களை நியமிக்காத சந்தர்ப்பத்தில் நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top