மதகுருமார்கள் மற்றும் சரதவீரசேகர எம்.பி ஆகியோர், வடக்கு - கிழக்கில் நீதிமன்றங்கள் எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதனை கணக்கில் எடுக்க போவதில்லை. நாங்கள் நினைப்பதை தான் செய்வோம் என்ற செய்தியினை நீதிமன்றங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தெரிவித்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் விசனத்துடன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த வேளை, குருந்தூர் மலையில் பௌத்த மதகுருமார்கள் வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட நீதிபதி உடனடியாக வழிபாடுகளை நிறுத்தகோரி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
நீதிபதியின் உத்தரவு தொடர்பில் பொலிஸார் பௌத்த மதகுருமாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குருந்தூர்மலை விகாரையில் மேற்கொள்ளப்பட்ட வழிபாடுகளை பௌத்த மதகுருமார்கள் நிறுத்தியுள்ளனர்.