13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
13ஆவது திருத்த சட்டம்
ஆகவே, அவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமைய செயற்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவதாக சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
தேசிய பொருளாதாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பாதுகாப்பாதற்காகவே ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம் என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிடுகிறார்கள்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் தென்னிலங்கையில் வீண் முரண்பாடுகள் தோற்றம் பெறும். நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இல்லாத பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எவ்வாறு ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு ஜனாதிபதி நடைமுறைப்படுத்துவார் என்பதை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபதிக்கும், நாடாளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது.
ஆகவே, 13ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது அத்தியாவசியமானது.
மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நடத்தினால் முரண்பாடற்ற நிலையான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.
அதனை விடுத்து மக்கள் ஆணை இல்லாத தரப்பினர் எடுக்கும் தீர்மானம் நாட்டில் முரண்பாடுகளை மாத்திரமே தோற்றுவிக்கும்.
13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.