புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை.....

tubetamil
0

 இணையவழி தொழிநுட்பத்தின் ஊடாக வாக்களிப்பை பதிவு செய்யும் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இதன் ஊடாக வாக்களிப்பில் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்குவதற்கான அவசியம் குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவானது அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

சார்க் பிராந்திய நாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கொள்கை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இந்தியா, பங்களாதேஷ், மாலைதீவு போன்ற சார்க் பிராந்திய நாடுகளுக்கு விசேடமான விசா வகையொன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இணக்கமான முறையில் விசா

இதன்காரணமாக, இந்த நாடுகளுக்கு இணக்கமான முறையில் விசா வழங்கும் முறையை தயாரிக்க குழு முன்மொழிவதாகத் தெரிவித்தார்.

மேலும் வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ளகப் பயிற்சித் திட்டத்தைத் (Internship Program) தொடங்குவது குறித்தும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் முறைமையொன்றை அமைப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதனால் அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டவர்களும் இணைந்து கொள்ள முடியும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.

சுற்றறிக்கையின் பிரகாரம், வெளிவிவகார அமைச்சின் கீழ் உள்ளகப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தற்போதைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த வேலைத்திட்டம் மிகவும் சம்பிரதாயமான முறையில் திறந்த வேலைத்திட்டமாக தயாரிக்கப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அத்துடன், இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக வாக்களிப்பை பதிவு செய்யும் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இதன் ஊடாக வாக்களிப்பில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, சபாநாயகருடன் கலந்தாலோசித்து இதற்கான அமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் கீழ் பல விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.



இதில் குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நிரோஷன் பெரேரா, சட்டத்தரணி எஸ். எம். எம். முஷாரப், அகில எல்லாவல, கோகிலா குணவர்தன, யதாமினி குணவர்தன, சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவின் தலைவரின் அனுமதியுடன் இதில் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top