திருகோணமலை - சீனக்குடாவில் விமானி மற்றும் அதிகாரி ஒருவர் உயிரிழந்தமைக்கு காரணமான பயிற்சி விமானம் விபத்தின் விசாரணை முடியும் வரை, அனைத்து PT-6 விமானங்களையும் தற்காலிகமாகத் தரையிறக்கியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் PT-6 பயிற்சி விமானம் நேற்று (07.08.2023) காலை புறப்பட்ட சில நிமிடங்களில் சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படையின் கல்லூரி மைதானத்தில் விழுந்து நொறுங்கியது.
முற்பகல் 11.25 மணிக்கு புறப்பட்ட நிலையில், சுமார் 11.27 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், விமானி மற்றும் அதிகாரியும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஸல் உதேனி ராஜபக்ச, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.
இலங்கை விமானப்படை விமானம்
சீனாவின் தயாரிப்பான PT-6 ரக விமானங்களில் 6 விமானங்களை இலங்கை விமானப்படை 2018ஆம் ஆண்டு கொள்வனவு செய்வதற்கு இலங்கை தேசியப் பாதுகாப்புச் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்காக 5 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது.
PT-6 சீனாவின் விமானப்படை மற்றும் அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
டிசம்பர் 2020இல், சீனன்குடாவில் இருந்து புறப்பட்ட மற்றொரு PT-6 விமானமும் கந்தளாவில் விபத்துக்குள்ளானபோது இதன் விமானி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.