2023ஆம் ஆண்டு இறுதியில் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக நிதி அமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
எனினும் குறிப்பாக கோதுமை மா மற்றும் தரை ஓடுகளை நிர்வகிப்பதில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய இரட்டைக் கொள்கைகளைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கட்டுப்பாடுகள் எவ்வளவு காலம் இருக்கும் என்று என குழு வினவியபோதே அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் ஹர்ஷ த சில்வா தலைமையில் இன்று(05) கூடியபோதே இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341 / 38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.
அத்தோடு 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைக்கும் ஹர்ஷ த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.