இந்தியாவில் கடந்தவாரம் நடைபெற்ற G-20 உச்சி மாநாடு கனடா விடயத்தில் எதிர்பாராத விதமாக, எதிர் விளைவுகளே உருவாகியுள்ளது.
இந்தியா வந்த கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உச்சி மாநாட்டுக்குப் பின் மீண்டும் கனடா புறப்பட இருந்த நிலையில், அவர் நாடு திரும்ப இருந்த விமானத்தில், எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.அதனால் 36 மணி நேரமாக அவர் டெல்லியிலேயே தங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால், இந்திய அரசு அவருக்கு உதவ முன்வந்துள்ளது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் முதலானோர் பயணிக்கும் Air India One விமானத்தில் அவர் உடனடியாக கனடா புறப்படலாம் என அவருக்கு இந்திய தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆறு மணி நேரம் கழித்து இந்திய அதிகாரிகளுக்கு பதிலளித்த கனேடிய அதிகாரிகள், இந்தியாவின் உதவியை நிராகரித்துள்ளதுடன், தங்கள் விமானம் வந்தபிறகே, ட்ரூடோ கனடா புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே, இந்தியப் பிரதமர் மோடி, ட்ரூடோவிடம் இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியது, மற்றும் ட்ரூடோ இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் ஆகியவற்றால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் உதவியை கனடா ஏற்க மறுத்ததுடன், பதிலளிக்கவும் தாமதம் செய்த விடயம், அந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்வதுபோல் அமைந்துள்ளது.