வெளிநாடு செல்வதற்காக வருகை தந்த பெண்ணொருவரின் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவை பாதுகாப்பு பிரிவில் ஸ்கேனிங் இயந்திரத்தை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வெளிநாடு செல்ல விமான நிலையம் வருகை தந்த பெண்ணிடமிருந்து தங்க செயின் மற்றும் பெண்டன் என்பனவற்றை திருடியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சந்தேகநபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், திருடப்பட்டதாக கூறப்படும் தங்க மாலையை (செயின்) நகைக் கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த போது சந்தேக நபர் விற்பனை செய்ததாக கூறப்படும் தங்க மாலை விற்பனை செய்த பின்னர் அது உருக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தோடு , குறித்த பெண்ணிடம் இருந்து திருடிய பெண்டன் மற்றும் இன்னுமொரு பெண்ணின் கைப்பையில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் சிறிய அளவிலான தங்க மோதிரங்கள் என்பனவும் மற்றுமொரு நகை கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.