பிரான்ஸ் வாழ் மக்களுக்கு சுகாதாரத் துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை...!

keerthi
0



ஒமெக்ரோன் வைரஸ் குடும்பத்தின் பிஏ2. 86 என்ற உப திரிபு தொற்றிய முதலாவது நோயாளி பிரான்ஸில்  பரந்த கிழக்குப் பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொதுச் சுகாதாரத் துறையை ஆதாரம் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது.

கொரோனா தொற்று  தடுப்பூசிகளாலும் ஏற்கனவே ஏற்பட்ட தொற்றுக்களினாலும் மனித உடல் பெற்றுக் கொண்ட நோய் எதிர்ப்புச் சக்தியை மீறிப்பரவக் கூடியது என்று நம்பப்படுகின்ற ஆபத்தான இந்தத் திரிபை உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்புத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அத்தோடு சமூக ஊடகங்களில்'பைரோலா' எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்ற இந்தப் புதிய உப-திரிபு கடந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், இங்கிலாந்து,டென்மார்க் போன்ற நாடுகளில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயினிலும் பரவுவது தெரிய வந்தது.

பைரோலா திரிபு மிக அதிக எண்ணிக்கையான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் நோய்க்காப்புச் சக்திக்குத் தப்பி வேகமாகப் பரவக் கூடுமென்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும் உலகெங்கும் கொவிட் வைரஸ் திரிபுகளின் மரபுவரிசைகளை ஆய்வுசெய்து கண்காணிக்கின்ற செயற்பாடுகள் கைவிடப்பட்டு விட்டதால் சர்வதேச அளவில் பைரோலா தொற்று பற்றிய தரவுகள் போதுமான அளவு பெறப்படவில்லை.

பிஏ2. 86 திரிபின் (பைரோலா) தாக்கம் என்ன என்பது இன்னமும் தெரியவராத ஒன்றாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், கண்காணிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் விழிப்பாகச் செயற்படுமாறு நாடுகளைக் கேட்டிருக்கிறது.

குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள சமயத்தில் பைரோலா மூலம் நாட்டில் புதிய தொற்றலை உருவாகலாம் என்று பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துறை எதிர்பார்த்துள்ளது.

அத்தோடு புதிய திரிபு வைரஸ் குறித்து இந்தக் கட்டத்தில் உடனடியாக அச்சப்பட எதுவும் இல்லை.தொற்று ஏற்பட்டால் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகள் எதுவும் தற்சமயம் அமுலில் இல்லை.

பொது அறிவின் அடிப்படையில் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்வதும் வயோதிபர்கள், குழந்தைகள்,தீவிர நோயாளிகளை நெருங்குவதைத் தவிர்த்துக் கொள்வதும் அவசியம் .

கடுமையான நோய் அறிகுறிகள் இருந்தால் அன்றிப் பணியிடங்களுக்குச் செல்வதற்குத் தடை இல்லை. தேவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி வழக்கமான சுகயீன லீவு பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top