கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு வயது மகள் உயிரிழந்துள்ளதுடன் அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு - மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று (17.09.2023) மாலை குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட தந்தை பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு அவரை அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவியும் மகளும் முச்சக்கரவண்டியில் அங்கு வந்துள்ளனர்.
இவ்வாறுஇருக்கையில், அவர்கள் வெளியேறும் போது நீதிமன்றத்திற்கு முன்பாக இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படகிறது.