16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்தோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு பதினாறு வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறுஇருக்கையில், விசாரணைகள் இடம்பெற்றதுடன் இன்றைய தினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த வழக்கானது இன்று கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறுமியின் வாக்குமூலம், சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் குறித்த நபர் குற்றவாளியென சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
இதன்படி, குறித்த நபரை குற்றவாளியென தீர்ப்பளித்த, கிளிநொச்சி மேல் நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.