ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை தான் பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த வாகனம் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாகன பிரிவில் உள்ள வழக்குப் பொருளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய, சஹ்ரான் ஹசிமின் வாகனத்தை சரத் வீரசேகர எப்படி பயன்படுத்த முடியும் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் அவ்வாறு ஒரு வாகனத்தையும் பயன்படுத்தவில்லை. வழக்குப் பொருளாக உள்ளதனை நான் எப்படி பயன்படுத்துவேன். வேண்டும் என்றால் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுப் பாருங்கள்.
சனல் 4 விவகாரம் பொய்யானதென நிரூபித்தக் கொண்டிருக்கும் போது இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதனை நான் முற்றிலுமான நிகராகரிக்கின்றேன்.
அத்தோடு அந்த குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை. எப்படியிருப்பினும் இந்த வாகனத்தை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் பயன்படுத்த முடியும். அது அரசுடமையாக்கப்பட்டவைகளாகும்.
நான் நாட்டிற்காக தியாகம் செய்து ஒரு இடத்திற்கு வரும் போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்தால் கண்டுக்கொள்ள முடியாது. புத்தருக்கே குற்றம் சுமத்தப்பட்டது. நான் இவற்றினை கண்டுக்கொள்ள மாட்டேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழர்களை இலக்கு வைத்து இன வன்முறையை தூண்டும் வகையில் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.