கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே தொடருந்து வட்டகொடை பகுதியில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
இன்று பிற்பகல் அளவில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், மலையகத்திற்கான தொடருந்து சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 தொடருந்து சாரதிகளை உடனடியாக பணிக்கு திரும்புமாறு தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு அவர்கள் உடனடியாக தமது பணிகளுக்கு திரும்பவில்லை எனில், சேவையிலிருந்து விலகியதாக கருதி கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடருந்து சாரதிகள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் முதல் அலுவலக மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 37 தொடருந்து சேவைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.