ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்குத் தீவிரமாகப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ள நிலையில், அங்கே போர் இரண்டாவது நாளாக நீடிக்கின்றது.
சர்வதேச அளவில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் தீர்க்கவே முடியாத ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அத்தோடு கடந்த காலங்களில் இதைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
70 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகின்றது. அத்தோடு கடந்த காலங்களிலும் கூட இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே கடும் யுத்தம் எல்லாம் நடந்துள்ளது.
மேலும் இந்தச் சூழலில் நேற்றைய தினம் காலை ஹமாஸ் படைகள் திடீரென இஸ்ரேலை நோக்கித் தாக்குதல் நடத்தின. இந்த ஹமாஸ் படை தான் காசா பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அத்தோடு இந்த ஹமாஸ் படைகளை இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாகவும் அறிவித்துள்ளது. நேற்று அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதலில் பாதிப்பு ரொம்பவே மோசமாக இருந்துள்ளது. வெறும் 20 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் படை இஸ்ரேல் நாட்டில் ஊடுருவி விட்டதாகவும் அவர்கள் அப்பாவி மக்களையும் சுட்டுக் கொன்று வருவதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிலரையும் ஹமாஸ் படையினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான ஷாக் வீடியோக்களும் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. பாரசூட் வழியாக வந்த இந்த ஹமாஸ் வீரர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை என்று தான் கூற வேண்டும். உலகின் அதிநவீன மற்றும் வலிமையான உளவு அமைப்பைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் உளவுத் துறை இதை எப்படிக் கோட்டைவிட்டார்கள் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. முதலில் இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேல், அடுத்துச் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதிலடி தரும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்கனவே தங்கள் நாட்டில் போர் ஆரம்பித்துவிட்டதாக அறிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு, தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டதாகத் தெரிய வருகிறது.
அத்தோடு , இஸ்ரேல் படைகள் ஏற்கனவே காசா பகுதியில் தாக்குதலை ஆரம்பித்துவிட்டனர். போர் விமானங்களைக் கொண்டு தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே காசா பகுதியில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவும் இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது. இப்படி இரு தரப்பும் அங்கே மாறி மாறி தீவிர தாக்குதலில் இறங்கியுள்ளன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே அங்குள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. உள்ளூர் அமைப்புகள் தரும் பாதுகாப்பு எச்சரிகையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே இரண்டாவது நாளாக இன்றும் அங்கே போர் தொடர்கிறது. அத்தோடு இரு தரப்பில் இருந்தும் தாக்குதலைத் தீவிரப்படுத்த உள்ளதால், அங்குள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இறுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.