2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவரது இல்லத்திற்கு செல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணங்கியுள்ளது.
அத்தோடு வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு டி லிவேராவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல தடவைகள் அறிவித்திருந்தனர்.
எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அவ்வாறான அறிவிப்புகளை அனுப்புவதற்கு தடைவிதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கக் கோரி முன்னாள் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயிஸ் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும் இதன்போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தப்புல டி லிவேராவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அவரது இல்லத்திற்குச் செல்லும் நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட சமரசத்திற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அதன்படி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன் அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.