அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக அரச தரப்பை மேற்கோள்காட்டி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அத்தோடு வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றும் நோக்கில் இம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பத்து பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அந்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காததால், அதனை தொடர்ந்து வலியுறுத்துவதில்லையென பெரமுன முடிவு செய்தது.
இதேவேளை, சில அமைச்சர்கள் மற்றும் அமைச்சுச் செயலாளர்களின் செயற்பாடுகள் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நாட்களில் அமைச்சுக்களின் பல செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணி விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தொடர்ந்து அநீதிகள் நடந்தால் வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது நெருக்கடியான காலகட்டத்திலோ உரிய பதிலடி கொடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கடந்த காலங்களில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.