அரசியலமைப்பின் அடிப்படையில் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் இன்று (21.10.2023) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள மாறாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்தோடு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டும் அடுத்த வருடம் நடத்தப்படும். அதேவேளை மாகாண சபைத் தேர்தல் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வாக்களிக்கும் மக்களில் 50 சதவீதத்தினர் அனைத்து அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றனர். அவர்கள் புதிய அரசியல் கலாசாரத்தை விரும்புகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில், அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. எனினும் அவற்றை வழிநடத்துவது யார் என்பது யாருக்கும் தெரியாது, எனவே புதிய ஆணைக்குழு, கட்சிகள் குறித்த விபரங்களை ஆராயும் என்று ரணில் தெரிவித்துள்ளார்.
சில கட்சிகள், பெரும் தொகை பணம் வழங்குபவர்களால், செல்வாக்கு பெற்றுள்ளன இவை அனைத்தையும் கமிஷன் விசாரித்து 6 வாரங்களுக்குள் தமது பரிந்துரையை செய்யும்.
இந்த நடவடிக்கை குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.