ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை விடயத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினரூம், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தும் ஒரே கருத்தையே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவை மேற்கோள்காட்டி திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் ஈடுபாட்டுடன் உள்ளுர் விசாரணைக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கும் ஆயர் பேரவைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் காட்டுவதற்கு ஜனாதிபதி முயற்சி எடுத்துள்ளதாக அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜேர்மன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது கூறியபடி அண்மையில் ஜனாதிபதி, தம்மையோ அல்லது ஆயர்களையோ சந்திக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி, ஒரு வருடத்திற்கு முன்னரே தம்மை சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா தெரிவித்துள்ளார்.