கடந்த 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த வேளையில் அவர்கள் ‛ஏழைகளின் கோகைன்' என அழைக்கப்படும் போதை மாத்திரையை எடுத்து கொண்டு போதையில் தான் அப்பாவி மக்களை சுட்டு கொன்றதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாவை மையமாக வைத்து செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் என்பது 2வது வாரமாக தொடர்ந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியதன் மூலம் தொடங்கிய இந்த மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தும் நிலையில் வரும் நாட்களில் காசா நகருக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக தான் காசாவின் எல்லை பகுதியை இஸ்ரேல் படைகள் முற்றுகையிட்டுள்ளன. அதோடு வடக்கு காசாவில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பல லட்சம் பேர் தங்களின் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறுஇருக்கையில் தான் கடந்த 7 ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் போதை மாத்திரைகளை உட்கொண்டு கொடூரமான தாக்குதலை நடத்தி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 7 ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது இஸ்ரேலின் 75 ஆண்டு வரலாற்றில் இல்லாத கொடூரமான அட்டாக்காக பார்க்கப்படுகிறது. சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகளை காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவி அட்டாக் செய்ததோடு, ஏராளமான ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து துப்பாக்கியால் அப்பாவிகளை சுட்டு கொன்று குவித்தனர்.
அன்றைய தினம் மட்டும் இஸ்ரேலில் மொத்தம் 1,400 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் ‛தி ஜெருசலேம் போஸ்ட்' எனும் பத்திரிகை ஷாக் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ஹமாஸ் தீவிரவாதிகள் கேப்டகன் எனும் போதைப்பொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்திரை வடிவிலான இந்த போதை பொருளை எடுத்து கொண்டு தான் ஹமாஸ் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான கொடூரமான தாக்குதலை தொடுத்துள்ளனர்.
இஸ்ரேலில் நுழைந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது அவர்களின் பாக்கெட்டுகளில் இருந்து கேப்டகன் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் அந்த போதைப்பொருளை பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போதை பொருள் ‛ஏழைகளுக்கான கோகைன்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு இந்த போதைப்பொருள் என்பது தூக்க விடாமல் ஒருவரை நீண்டநேரம் கண்விழிக்க உதவி செய்யும். அதோடு பசி ஏற்படாமலும் இது தடுக்கும். இதனை சாதகமாக பயன்படுத்தி தான் அவர்கள் எல்லை தாண்டி காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் இருந்து தான் இந்த வகை போதைப்பொருள் மிகவும் பிரபலமானது. சிரியா, லெபனானில் இது உற்பத்தி செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. காசாவிலும் இந்த போதைப்பொருள் அதிகம் புழங்குகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதாக ‛தி ஜெருசலேம் போஸ்ட்' தெரிவித்துள்ளது.
இது மத்திய கிழக்கு நாடுகள் உள்பட பல நாடுகளில் தற்போதும் புழக்கத்தில் உள்ளது. மனச்சோர்வை குறைக்க இது முதலில் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது போதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் விலை என்பது பிற போதைப்பொருட்களை விட குறைவாக இருக்கிறது. அதோடு எளிமையான முறையில் இதனை தயாரிக்கலாமாம். இதனால் தான் இதனை தற்போதும் அதிகமானர்வர்கள் பயன்படுத்துவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.