கொழும்பு – கறுவாத்தோட்டம் பகுதியில் மகிழுந்து மோதி காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச் சந்தேகநபர் புதுக்கடை 7ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அத்தோடு கறுவாத்தோட்டம் - சுதந்திர சதுக்க சுற்றுவட்ட வீதிக்கு அருகில் நேற்று மாலை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, மகிழுந்தொன்று மோதி காயமடைந்தார்.
காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராவார்.
அத்தோடு இவ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் தனியார் நிறுவனமொன்றில் தொழில்நுட்ப பொறியியலாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த குறித்த காவல்துறை கான்ஸ்டபிளுக்கு, சார்ஜன்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.