சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்.. எகிப்து நோக்கி பாய்ந்த இஸ்ரேல் பீரங்கி.!

keerthi
0


 இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென எகிப்து வீரர்கள் சிலர் இஸ்ரேல் பீரங்கி தாக்குதலால் காயமடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகச் சண்டை நடந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் நாட்டவரை அவர்கள் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.


இதையடுத்து இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. காசா பகுதி மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.


 எனினும் இதற்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நாட்டின் பீரங்கியில் இருந்து வந்த குண்டுகள் எகிப்து நாட்டில் தாக்கியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே மோதல் நடந்து வரும் நிலையில், திடீரென ஏவுகணை எகிப்தைத் தாக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து ஹமாஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் நேரடியாக மோதலில் ஈடுபடவில்லை.


மேலும், சர்வதேச வர்த்தகத்தின் அடிநாதமாக இருக்கும் சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் தான் இருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 12% இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடக்கிறது. இந்தச் சண்டையில் எகிப்து உள்ளே வந்து சூயஸ் கால்வாய் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால் அது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். உலகின் அனைத்து நாடுகளும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.


எகிப்து மீது தாக்குதல்? இதனால் எகிப்து மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. அதாவது இது திட்டமிடப்பட்ட தாக்குதல் இல்லை என்றும் தவறுதலாக எகிப்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து விரிவான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.


மேலும் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது ட்விட்டரில், "சிறிது நேரத்திற்கு முன்பு, கெரெம் ஷாலோம் பகுதியில் எல்லையை ஒட்டிய எகிப்திய போஸ்ட் மீது ஐடிஎஃப் டேங்க் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவிக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.


மேலும், எகிப்து தரப்பிலும் இது குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் பீரங்கியில் இருந்து எகிப்து நோக்கி எதிர்பாராத விதமாகப் பாய்ந்த இந்த ஷெல் தாக்குதலில் சில எகிப்து எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு மைனர் காயம் ஏற்பட்டதாக எகிப்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


இது தவறுதலாக நடந்த தாக்குதல் என விளக்கம் தரப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது ஒட்டுமொத்தமாகவே மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. ஏற்கனவே லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையே எகிப்தும் இந்த சண்டையில் உள்ளே வந்தால் அது ஒட்டுமொத்தமாக அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top