இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தற்பொழுது இலங்கையின் பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இலங்கையில் தற்பொழுது அதிகமானவர்கள் ஒருவேளை உணவையே உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் சிலர் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு இலங்கையின் பொருளாதாரம் வீழ்சிகண்டுள்ளது.
இந்நிலை தொடருமாயின் சோமாலியாவை விட எமது நாடு படு பாதாளத்திற்கு சென்றடையும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு அவர் தெரிவிக்கையில், கடல்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளவாறு, தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மீன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காகவும் வைத்தியசாலைகளின் தேவைகளுக்காக மீன் இனங்களை இறக்குமதி செய்வதாகவுவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே எமது பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க முடியாத நிலையிலும், கரையோரங்களில் மீன் பாடு இல்லாமலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்த வரும் நிலையில், தற்பொழுது கடல்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு இப்படியான விடையங்களை கூறுவது ஏற்கமுடியாது.
மேலும் கடல் அட்டை பண்ணை மூலம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக முன்னர் கூறினார். ஆனால் தற்போது, கடலட்டை பண்ணையும் இல்லை. மீனவர்களிற்கு வாழ்வாதாரமும் இல்லை.
கடல் தொழில் அமைச்சர் ஒரு தமிழனாக இருந்து கொண்டே தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத அமைச்சராக உள்ளார். அயல் நாட்டு மீனவர்களின் ரோலர் படகுகளின் பிரச்சனையை தீர்க்க முடியாத அமைச்சர், இரும்பு ரோலர் படகு மூலம் அவர்களை இடிப்போம் என்று கூறியவர், தற்பொழுது சீனாவிடம் சென்று மண்டியிட்டு மீன் இறக்குமதி செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலை தொடருமாயின், இனிவரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் இனங்களையே நாங்கள் உண்ண வேண்டிய நிலை ஏற்படும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரமும் இல்லாமல் அழிக்கப்படும் சூழல் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.