போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் அதன் நிறுவன உரிமையாளருக்கும், அதற்கு அனுமதி வழங்கிய அரச உயர் அதிகாரிகள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மனுவொன்றின் ஊடாக முன்வைத்த சர்ப்பணங்களை அடுத்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான 'அருண தீப்தி' என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோக பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு போலியான ஆவணங்களை தயாரித்து 22,500 இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது.
இதன்போது 130 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, சுகாதார அமைச்சின் தகவல் முகாமைத்துவ அமைப்பு தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அரச கணக்குகள் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு அதிக எண்ணிக்கையிலான தகவல் மேலாண்மை அமைப்புகளை நிறுவியுள்ள போதிலும் சுகாதார அமைப்பைக் கட்டமைப்பதில் அதன் பங்களிப்பு தொடர்பில் குறித்த உபகுழு அவதானம் செலுத்தியுள்ளது.
அதாவது நாடளாவிய ரீதியில் 723 வைத்தியசாலைகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்வஸ்த தகவல் முகாமைத்துவ அமைப்பை மேலும் 436 வைத்தியசாலைகளில் நிறுவுவதற்கான காலவரையறையை தயாரிக்குமாறும் உபகுழு ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.