மாத்தறை – பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் தடியால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து, வீட்டில் இருந்த 12 போலி தங்க ஆபரணங்கள் மற்றும் நாட்டு நாணயங்களை திருடிய நபர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணும் மாத்தறை அபேகுணவர்தன மாவத்தையில் வசிக்கும் 70 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
எனினும் குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் நேற்று (07.10.2023) காலை மாத்தறையில் உள்ள தனது வியாபார இடத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை கண்டுள்ளார்.
வீட்டின் வெளியே அமைந்துள்ள குளியலறை மற்றும் கழிவறையில் சடலங்கள் காணப்பட்டதாகவும், பின்னர் இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பக்கத்து வீடொன்றின் பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.