யாழ் - தையிட்டி சிவன் ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபட்டவர்களுடன் காவல்துறையினர் முரண்பாட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கெதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று(28) மாலை ஆரம்பமானது.
அத்தோடு பௌர்ணமி தினமான இன்று குறித்த விகாரைக்கு தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்கள் வழிபாடுகளுக்காக அழைத்து வரப்பட்ட சம காலப்பரப்பில் தையிட்டி விகாரைக்கு அண்மையிலுள்ள சிவன் கோயிலில் போராட்டக்காரர்களால் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
சிவன் ஆலயத்தில் ஒலிபரப்பப்படும் பக்திப் பாடல்களானது திஸ்ஸ விகாரையில் மேற்கொள்ளப்படும் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக காணப்படுவதாக கூறியே பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டவர்களுடன் காவல்துறையினர் முரண்பட்டுள்ளனர்.
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரித் ஓதும் சத்தம் தமக்கும் கேட்பதாகவும், அதனை நிறுத்தினால் தாமும் பாடல் சத்தத்தை குறைப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இறுதியில் இரு தரப்பினரதும் செயற்பாடுகளைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது..