இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இதற்குக் காரணமாகும்.
இதையடுத்து இரு நாடுகளும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வந்தன. அத்தோடு, கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களைக் காட்டிலும், இந்தியாவில் அதிகப்படியான கனடா தூதர்கள் இருப்பதாகத் தெரிவித்த இந்தியா, இதில் ஒரு சமநிலை தேவை என்று வலியுறுத்தியிருந்தது.
அத்தோடு தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் பல தூதர்கள் கனடா திரும்பப் பெற்றது. இதற்கிடையே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கனடா தூதர்கள் மீதான இந்திய அரசின் நடவடிக்கை இரு நாடுகளிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடினமாக்குகிறது என்று தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் 41 தூதரக அதிகாரிகள் வாபஸ் பெற்ற நிலையில், ட்ரூடோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்பமுடியாத அளவிற்கு இந்திய அரசு கடினமாக்குகிறது. அவர்கள் ராஜதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையை மீறி அதைச் செய்கிறார்கள். இந்தியாவை தங்களுடைய பூர்வீகமாகக் கொண்ட லட்சக் கணக்கான கனடா மக்களின் நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியைக் கருத்தில் கொண்டே நான் இதைக் கூறுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கனடாவின் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவது பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் இடையூறாக இருக்கும் என்றும் கனடாவில் படிக்கும் இந்தியர்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும் ட்ரூடோ கூறினார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ட்ரூடோ கூறியுள்ள இந்தக் கருத்துகள் மேலும் மோதலை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கிறது.
கனடாவில் வசிக்கும் 20 லட்சம் பேர், அதாவது அந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5% பேர், இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். மேலும், கனடாவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களில் சுமார் 40% இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கனடாவில் உள்ள பலர் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இருப்பினும், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா கூறுவதே சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது. மேலும், தூதர்கள் விவகாரத்திலும் கூட வியன்னா ஒப்பந்தத்தை மீறவில்லை என்றே இந்தியா கூறியிருந்தது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "இரு தரப்பு உறவைப் பொறுத்தவரை இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கனடா தூதர்கள் இருந்தனர். எங்கள் உள் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிட்டனர். இதன் காரணமாகவே இரு நாடுகளின் தூதரக உறவில் ஒரு சமநிலை வேண்டும் என்று நாங்கள் கூறினோம்" என்று அவர் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் தங்கள் 41 தூதர்களைக் கனடா அரசு வாபஸ் பெற்றுள்ளது. இருப்பினும், இப்போதும் கூட கனடாவில் இருந்து சுமார் 21 தூதர்கள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.