நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்ததுடன் 375 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானது.
அத்தோடு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளத்தின் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.
நேபாள அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நிலநடுக்கத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 375 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அரசு தரப்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாள இராணுவம், பொலிஸ், ஆயுதப்படையை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு நேபாள பிரதமர் பிரசண்டா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.
நேபாளத்தின் கர்னாலி மாகாண காவல் துறை தலைவர் பீம் தாகல் கூறும்போது, “ஜாஜர்கோட் மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. ஜாஜர்கோட் மாநகராட்சி துணை மேயர் சரிதா சிங் உயிரிழந்தார். அத்தோடு படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.