காசாவில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 20 நாட்களாக இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த பாலஸ்தீன் நிலங்களை மீட்கவும், இஸ்ரேல் ராணுவம் பல ஆண்டுகளாக காசா மீது நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், இஸ்ரேல் அல் அக்சா மசூதியின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் கூறி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அத்தோடு இந்த தாக்குதலால் நிலைகுலைந்த இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்து காசா மீது தாக்குதல் நடத்தியதில் ஏராளமான குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காசாவில் படு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது.
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. தங்கள் நாட்டு பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது. குறிப்பாக 40 குழந்தைகளின் தலையை துண்டித்ததாக குற்றம்சாட்டியது இஸ்ரேல். இதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலரும் கூறிய நிலையில் அது உண்மையில்லை என தெரியவந்தது. மாறாக அடுத்தடுத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது ஹமாஸ்.
இவ்வாறுஇருக்கையில் ஐநா பொது சபையில் ஜோர்டான் நாடு கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. மறுபக்கம் இஸ்ரேல் பாலஸ்தீனின் காசா மீது உக்கிரமான தரை வழித்தாக்குதலையும், வான் வழித் தாக்குதலையும் தொடர்ந்து வருகிறது. காசாவில் நாளுக்கு நாள் உயிர் பலிகள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகின்றன.
அத்தோடு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே போருக்கு அஞ்சி உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வீடுகளை விட்டு வந்த அகதிகள் தங்கி இருந்த காசாவில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.