இலங்கையின் பல பகுதிகளில் சடலங்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்லேகல கைத்தொழில் கொலனியில் உள்ள மகாவலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (31) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்லேகல பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உயிரிழந்தவர் கலகொல்லாகொட, பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும், உயிரிழந்தவரின் கால்சட்டைப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்து அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் மனைவியினால் சடலம் அடையாளம் காணப்பட்டதுடன், இறந்தவர் கடந்த 28ஆம் திகதி வீட்டை விட்டுச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டபிட்டிய பிரதேசத்தில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என பின்னர் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த நபரின் உடலில் இரத்தம் வடிந்து உயிரிழந்துள்ளதுடன், தாக்குதல் காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையில் இறந்தவரின் மனைவி கடந்த 29ஆம் திகதி குறித்த நபர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகஸ்மல்ல பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ராஜகிரியை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.