நுவரெலிய அஞ்சல் நிலையத்தை தாஜ் சமுத்திரா சுற்றுலா விடுதிக்கு வழங்க தீர்மானம்!

keerthi
0






நுவரெலிய அஞ்சல் நிலையம் அமைந்துள்ள இடத்தை தாஜ் சமுத்திரா சுற்றுலா விடுதிக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் நுவரெலியா அஞ்சல் அலுவலகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.


எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நுவரெலியாவிலுள்ள குறித்த அஞ்சல் நிலையம் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.


நாடு தற்போதைய பொருளாதார நிலைமைகளுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது முடியாத காரியமாகும்.


இலங்கையின் முன்னணி சுற்றுலா விடுதிகளில் ஒன்றான தாஜ் சமுத்திராவினால், சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அஞ்சல் நிலைய கட்டடம் கோரப்பட்டுள்ளது.


இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார் எனவும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தாமும் இந்த யோசனையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்தோடு, நுவரெலியா பகுதியில் இத்தகைய சுற்றுலா விடுதியொன்று நிர்மாணிக்கப்படுவதால், அந்த பகுதியில் மக்களுக்கான தொழில்வாய்ப்புகள் உருவாகுவதுடன், இதனூடாக பலரினது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முடியும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


உலகின் முதலாவது பிரதமர் வசித்துவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீடும் தற்போது, சுற்றுலா விடுதியாக இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.


ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் அலுவலகங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், இன்று பிற்பகல் நான்கு மணி முதல் கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நுவரெலியா அஞ்சல் நிலையம் விற்பனை செய்யப்படுவதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் இன்றைய தினம் குறித்த அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.


அத்துடன், நுவரெலியா விடுதிகள் சங்கம் மற்றும் சுற்றுலா சேவைகள் சங்கத்தினது உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top