யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலையொன்றின் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வரில் ஒருவர் யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய மூவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு யாழ்ப்பாணம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவனே தாக்கப்பட்டார். அவரது செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையில் முறைப்பாடு பதியப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறை புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில் நேற்றைய தினம் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரது வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்தோடு அந்த மாணவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் மூன்று மாணவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்புகையிலேயே மாணவன் தாக்கப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.