யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில், நேற்றையதினம் (20.11.2023) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இருபது இலட்சம் காணி உறுதிகளை வழங்குவதற்கு சுமார் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் சொந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்களுடைய சொந்த காணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்திலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக காணப்படுவதோடு பல முயற்சிகள் செய்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை. இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இப் பிரச்சினை தீர்த்துத்தரப்பட வேண்டும்.
அத்தோடு, திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தோப்பூர், செல்வநகர் பிரதேசங்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையும் இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
இலங்கையில் தற்போது வாழ்வாதார செலவு உச்சநிலையில் காணப்படுகின்ற நிலையில், அரச ஊழியர்களது பத்தாயிரம் சம்பள அதிகரிப்பானது ஒரு கண்துடைப்பு மற்றும் இந்த காலகட்டத்தில் எதற்கும் போதுமானதாக இல்லை” என குறிப்பிட்டார்.