ஆறாத காயங்களை ஏற்படுத்திய ஆழி பேரலைக்கு இன்றுடன் வயது 19..!!

tubetamil
0

 ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலகவாழ் மக்களால் மறந்துவிட முடியாது.


இதேபோன்ற ஒரு நாளில் யாரும் எதிர்பார்த்திராத சில நொடிகளில் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இன்று போல் ஒரு பூரணை தினத்தில் உலக வாழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய பேரனர்த்தம் தான் ஆழிப் பேரலை.

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் நத்தார் தினத்தின் அடுத்த நாளில் பூரணை தினம் வருவது இதுவே முதல் முறையாகும்‌.

நத்தாருக்கு மறுதினம் அனைவரும் தங்களது அன்றாட கடமைகளுக்காக தயாரான நிலையில், காலை 6.58 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்சீற்றத்தினால் ஆசியாவின் 14 நாடுகளைச் சேர்ந்த 2 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

காலி மாவட்டத்தின் பெரலிய என்ற இடத்தில் பயணித்த தொடருந்தில் இருந்த 1,700 பேருடன் சேர்த்து, எமது நாட்டில் 40,000 மக்கள் வரை உயிரிழந்தனர்.

இலங்கை தொடருந்து சேவையில் ஏற்பட்ட விபத்துகளில் அதிகளவான உயிர்களை காவு கொண்ட விபத்து இதுவென இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றைய நாட்களில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிகளவில் பேசப்பட்ட சுனாமி பேபி 81 என்ற குழந்தையையும் நாம் மறந்து விட முடியாது.

அந்த சுனாமி பேபி 81 இந்த வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார் .


சுனாமி அன்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் 81ஆம் இலக்க வாட்டில் 2 மாத சிசுவாய் கிடந்தவரே சுனாமி பேபி 81.

இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத குழந்தைக்கு சுனாமி பேபி 81 என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த குழந்தைக்கு 7 தாய்மார்கள் உரிமை கோரினார்கள்.

52 நாட்களின் பின்னர் மரபணு பரிசோதனையின் மூலம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தை சேர்ந்த ஜெயராஜ், ஜூனிலதா தம்பதியினரின் குழந்தை அபிலாஷ் என உறுதி செய்யப்பட்டு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

அந்த தருணத்தில் ஆழி பேரலைப் பற்றி அறிந்திராத சுனாமி பேபி 81 என்ற ஜெயராஜ் அபிலாஷ் ஒவ்வொரு வருடமும் தனது வீட்டில் அமைத்துள்ள நினைவுதூபிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்.

இதேவேளை, அனைவரையும் எல்லையற்ற சோகத்தில் ஆழ்த்திய ஆழி பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சர்வதேச ரீதியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

19 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலைப் போன்று மீண்டும் ஒரு முறை இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க எமது செய்திப்பிரிவு பிராத்திக்கின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top