வடக்கு மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மூன்று பேர் துப்பாக்கிகளுடன் விருந்து நிகழ்ச்சிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் விருந்து நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். அத்தோடு இந்த தாக்குதலில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். உடனே தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அத்தோடு பலியானவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். காயம் அடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.