விலக்களிக்கப்பட்ட 97 பொருட்கள் - சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது

tubetamil
0

 வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


அதன்படி குறித்த திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விவாதத்தின் பின்னர் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் நேற்று விசேடமாக கூடியது.

எனினும், விவாதத்தின்போது கூட்ட நடப்பெண் அல்லது கோரம் இன்மையினால், சபை நடவடிக்கைகள் இன்று காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உரையாற்றினார்.

அதன்போது, சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு கோரம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பிரதி சபாநாயகருக்கு அறிவித்தார்.

இதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்ட பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, கோர மணியை ஒலிக்குமாறு உத்தரவிட்டார்.

அரசியலமைப்பின் 73 ஆவது பிரிவின்படி, சபை நடவடிக்கையின் போது இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டிய மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக இருக்க வேண்டும்.

எனினும், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தின் கோரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது பிரதி சபாநாயகர் தவிர்ந்த 16 ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருமே சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்தநிலையில், சபை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவையும் சபாநாயகரையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் இன்று விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 138 பொருட்கள் மற்றும் சேவைகளில் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய திருத்தத்தின் மூலம் மீண்டும் வரியை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி, டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு மீது 18 சதவீத பெறுமதி சேர் வரியை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தத்தின் மூலம் தற்போதைய பணவீக்கம் சுமார் 2 வீதத்தால் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top