கற்பிட்டி, தளுவ - நிர்மலாபுர பிரதேசத்தில் நத்தார் விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (25) காலை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையை பொறுப்பேற்றிருந்தார் எனவும், அவர் ஊழல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்றிரவு (25) இரவு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது நண்பர்கள் சிலருடன் மது விருந்தில் கலந்து கொண்டதுடன், அந்த விருந்தில் குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த சிலர் பொலிஸ் கான்ஸ்டபிளையும் அவருடன் வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளனர்.
இதுபற்றி நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் குழு, தாக்குதலுக்கு உள்ளான புதிய பொலிஸ் கான்ஸ்டபிளை சிகிச்சைக்காக வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மது அருந்தியது உறுதியானது.
வெளிநோயாளர் பிரிவில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக வார்டில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாருக்கும் தெரியாமல் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.