சிங்கள மக்களுக்கு உண்மையை சொல்லாமல் வெறுமனே பேச்சுவார்த்தைக்காக அழைப்பது அப்பட்டமான பொய் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழத் தேசிய மக்கள் முன்னணியை தவிர்த்து ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
அந்த பேச்சுவார்த்தைகளில் ஊடகங்களுக்கு இந்த சந்திப்பு தொடர்பாக சொல்லப்பட்ட விடயம், தீர்வு சம்பந்தமாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாகவுமான பேச்சுவார்த்தை இது என்று.
எனினும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாக உலகத்திற்கு காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே இந்த பேச்சுவார்த்தை.
எனினும் இதை தவிர ரணில் விக்ரமசிங்க ஒரு போதும் இந்த பிரச்சினையை நேர்மையாக தீர்க்க மாட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சுவார்த்தையிலே பங்கேற்பதாக இருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க உண்மையை சொல்லட்டும், தமிழினப் பிரச்சினைக்கு தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு சமஷ்டியே தீர்வு, சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய ஒரு சமஷ்டியே தீர்வு.
ஆகவே இந்த பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி சமஷ்டியின் அடிப்படையிலேயே எப்படி இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்பதை பற்றித்தான் அமையும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு வெளிப்படையாக நேர்மையாக கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கலாம்.
அதைச் செய்யாமல் வெறுமனே தீர்விற்காக வாருங்கள் பேசுவோம் பெப்ரவரி நான்காம் திகதிக்கு இடையில் தீர்வை கொடுப்போம் என சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்கள் என குறிப்பிட்டுள்ளார்.