தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (28) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது.
எனினும் பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள தனது இல்லத்தில் கடந்த 26 ஆம் திகதி இரவு தனது வேலையை முடித்த நிலையில் உறக்கத்திற்கு சென்றுள்ளார்.
உறக்கத்திற்கு சென்ற நிலையில் இன்றைய தினம் காலை குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கடந்த இரண்டு நாட்கள் காணாத நிலையில் உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் இன்று காலை அவரது இல்லத்தில் தேடிச்சென்ற போது மழை வெள்ளத்தில் இறந்துகிடந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக குறித்த நபர் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன் தலைமன்னார் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இவரது சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.