ஐரோப்பிய நாடான செக்குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அதாவது கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.
இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இவ்வாறுஇருக்கையில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது போலீசில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்தார். மேலும் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.