அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. அரசின் முதலமைச்சர், 2-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்றும், எனவே, மின் கட்டணங்களைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, தமிழகத்தில் மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தற்போது இரண்டாம் முறையாக மின் கட்டணத்தையும் உயர்த்தியதால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு, பல தொழில் முனைவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தமிழகம் தொழிற்துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையையும், மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்படுவதையும் தடுக்கும் விதத்தில் மின் கட்டணங்களை முன்பிருந்தது போல், அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்ததைப் போல் மாற்றி அமைக்க வலியுறுத்துகிறேன்.
அத்தோடு ஒரு அரசு வரி விதிக்கும் போதும், கட்டணங்களை உயர்த்தும் போதும், எப்படி பசுவிடம் இருந்து பசு அறியாமலேயே பால் கறக்கிறோமோ அதுபோல், தொழில் முனைவோர் பாதிப்படையாத வகையில், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையாத நிலையில் செயல்பட வேண்டும். அளவுக்கு மீறி பசுவிடம் இருந்து பாலை உறிஞ்ச நினைத்தால், பசு ரத்தம் இன்றி மாண்டு போகக்கூடிய நிலை ஏற்படும். ஏனெனில், பசு தனது ரத்தத்தை பாலாக மக்களுக்கு வழங்குகிறது.
எனினும் அதுபோல், தொழில் முனைவோர்கள் தங்கள் முதலீடுக்கு நஷ்டம் இன்றி, தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ப ஊதியம் வழங்க ஏதுவாக, அதே சமயத்தில், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயை பெறக்கூடிய வகையில், சொத்து வரி உயர்வு, தொழில் வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றை தொழில் முனைவோர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் விதிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.