கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட ஆளணி வளங்களுக்கான பற்றாக்குறை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் குறித்த வைத்தியசாலை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருவதால் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மாவட்ட பொது வைத்தியசாலையில் கதிரியக்க நிபணர்கள் இன்மையால் சிகிச்சைக்கு வரும் அதிகளவான நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அத்தோடு, நோயாளர்கள் அதிகளவான நாட்கள் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலையிலும் உள்ளனர். இதனால், யாழ் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள கதிரியக்க நிபுணரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்ற கோரியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், குடும்பநல மருத்துவர்கள், சுகாதார சேவை உதவியாளர்கள் உட்பட பல ஆளணி வெற்றிடங்கள் குறித்த வைத்தியசாலையில் நிலவுகின்றது.
இவ்வாறுஇருக்கையில், ஆளணி வளங்களை நிரப்புவதற்கு மத்திய மற்றும் மாகாண அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.