இந்த பண்டிகைக் காலத்தில் அரிசியை இறக்குமதி செய்யவில்லை என்றால் அரிசியின் விலை வேகமாக அதிகரித்திருக்கும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவும் சவால்மிக்க சந்தர்ப்பத்திலேயே நான் இந்த அமைச்சை ஏற்றுக் கொண்டேன். வயல்களுக்கு சென்று பயிரிடுமாறு நான் முதல் முதலாக விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன்.
அன்று 212,000 ஹெக்டெயார்கள் நெல் பயிரிடப்பட்டது. ஆனால் இந்த விளைச்சலை அதிகரிக்க ஆர்வத்துடன் செயற்படுமாறு நான் மிகவும் தாழ்மையுடன் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
உரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயிரிடுமாறு நான் கூறினேன். அதன் பிறகு 512,000 ஹெக்டெயார்கள் நெல் பயிரிடப்பட்டது. இதுவே அண்மைக்காலத்தில் கிடைத்த அதிக விளைச்சலாகும். அன்றும் பல்வேறு சவால்கள் காணப்பட்டன.
அத்தோடு தரம் குறைவான உரம் கொண்டுவரப்படுவதாகவும், நிறை குறைந்தது என்றும் கூறப்பட்டது. உரங்களில் புழுக்கள் இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் நாம் படிப்படியாக இரு போகங்களிலும் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டோம். நாம் அனைத்து வகை உரங்களையும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுத்தோம். நிதி உதவிகளையும் வழங்கினோம். எரிபொருள் மானியங்களையும் வழங்கினோம்.
இதன் மூலம் வெற்றிகரமான நெல் விளைச்சல் கிடைத்தது. எமக்கு வருடாந்தம் 25,40,000 மெட்ரிக் தொன் அரிசி அவசியமாகும். இம்முறை 27,50,000 மெட்ரிக் தொன் விளைச்சல் கிடைத்தது.
எனினும் இதன் ஊடாக இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கு மேல் மேலதிக விளைச்சல் இம்முறை கிடைத்துள்ளது. ஆனாலும் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.
காரணம், அதிக நெல் விளைச்சல் கிடைத்தாலும் நெல் ஆலையாளர்கள் அவற்றை முழுமையாக சந்தைக்கு விநியோகிக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அதேபோன்று கீரி சம்பா விளைச்சலில் குறைவு ஏற்பட்டதே தவிர பொதுவாக மக்கள் உட்கொள்ளும் அரிசி வகையில் குறைவு ஏற்படவில்லை.
எனவே இந்த பண்டிகைக் காலத்தில் அரிசி இறக்குமதி செய்யவில்லை என்றால் அரிசியின் விலை வேகமாக அதிகரித்திருக்கும். இதனால் தான் நாம் விருப்பமின்றியேனும் அரிசி இறக்குமதி செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.