வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவில் முக்கிய குளங்களில் ஒன்றான முல்லைத்தீவு அம்பலப்பெருமாள்
குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
1990ஆம் ஆண்டிற்கு பின்னர் இக்குளத்தில் முழுமையான புனரமைப்பு பணிகள் இடம்பெறாததன் காரணமாக ஆண்டு தோறும் பெரும் மழை காலத்தில் கிராம விவசாயிகள் ஒன்றிணைந்து குளத்தின் அணைக்கட்டிற்கு மண் மூடைகள் அடுக்கி அணைக்கட்டினை பாதுகாத்து வருகின்றனர்.
விவசாயிகளைச் சந்திக்கின்ற நீர்ப்பாசன பொறியியலாளர்கள் குளத்தினை புனரமைப்பதற்கு நிதி வரும் என கூறியுள்ளனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை எனவும் குளத்தின் உட்பகுதியில் அடுக்கப்பட்டிருந்த அலை கற்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் அணைக்கட்டிற்கு வேலைக்கென குளத்திற்குள் தள்ளி விடப்பட்டது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐயன்கன் மற்றும் பழையமுறிகண்டி ஆகிய குளங்கள் நிரப்பிய பின்னர் அவ்இரு குளங்களின் வெள்ளமும் அம்பலப்பெருமாள் குளத்தினை நிரப்பி வான் பாயும்போது அம்பலப்பெருமாள் குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுப்பதற்கான சூழல் உருவாகும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பலப்பெருமாள் குடியேற்றத் திட்டத்தில் இக்குளத்தினை நம்பி 110 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.