வீட்டில் இருந்து காணாமல் போன ஏழு பிள்ளைகளின் தாயின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசித்து வந்த ஏழு பிள்ளைகளின் தாயான பெருமாள் ராகம்மா (82) என்பவரின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துள்ளது.
வென்சர் தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் கெசல்கமுஓயாவிற்கு அருகில் உள்ள, தனது வீட்டில் வசித்து வந்தவரைகடந்த 10 ஆம் முதல் காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் நோர்வூட் மரண விசாரணை அதிகாரி நடராஜா ரவிக்குமார் முன்னிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.